பஸ் நிலையங்களில் கூட்டம் சொந்த ஊரிலிருந்து திருப்பூர் திரும்பிய தொழிலாளர்கள்!!
21 January 2025
திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்ததால் திருப்பூரில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது.
திருப்பூர்:
பனியன் தொழில் நகரமான திருப்பூரில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கல் பண்டிகையையொட்டி பனியன் நிறுவனங்களுக்கு 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட ங்களை சேர்ந்தவர்களும், கரூர் திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்களும் என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
இந்தநிலையில் பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் பஸ்கள், ரெயில்களில் சிரமமின்றி செல்ல நேற்று முன்தினம் முதல் தொழிலாளர்கள் திருப்பூர் திரும்ப ஆரம்பித்தனர். இன்று காலை பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாரை சாரையாக வந்தனர். அவர்கள் திருப்பூர் திரும்புவதற்கு வசதியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் இன்று காலை திருப்பூர் ரெயில் நிலையம், கோவில்வழி பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் தொழிலாளர்கள், பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரெயில்களிலும் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இறங்கினார்கள். இதனால் திருப்பூர் ரெயில் நிலையத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவர்கள் திருப்பூரில் இருந்து அவினாசி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்ததால் திருப்பூரில் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. தொழிற்சாலைகள், கடைகள் திறக்கப்பட்டதால் இன்று அதிகாலை முதல் திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள சாலைகள் மீண்டும் பரபரப்பான இயக்கத்துக்கு திரும்பின